Saturday, July 5, 2014

தவாங் – எங்கும் காணமுடியாத இயற்கையின் தூய எழில்!

இந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த தெய்வீக மலை எழிற்பிரதேசம் அமைந்திருக்கிறது. வடக்கில் திபெத்தையும், தென்மேற்கில் பூடானையும், மேற்கில் சேலா மலைத்தொடர்களையும், கிழக்கில் மேற்கு கேமேங் மலைகளையும் இது எல்லைகளாக கொண்டுள்ளது.
தவாங் புகைப்படங்கள் - தவாங் வார் மெமோரியல் - முகப்புத் தோற்றம் 
Image source: tawang.nic.in
இங்குள்ள தவாங் மடாலயத்தின் பெயரிலேயே இந்தப்பகுதி அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தவாங் நகரத்தை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு மலைப்பகுதியின் விளிம்பில் இந்த தவாங் மடாலயம் ஒரு அற்புத தெய்வீக தோற்றத்துடன் காட்சியளிக்கின்றது. ‘த’ என்பது குதிரையையும் ‘வாங்’ என்பது ‘தேர்ந்தெடுத்த’ என்பதையும்
குறிக்கிறது.
வழங்கி வரும் கதைகளின்படி, இந்த மடாலயம் அமைந்திருக்கும் இடமானது மேராக் லாமா லோட்ரே கியாம்ட்சோ எனும் மதகுரு வைத்திருந்த குதிரை தேர்ந்தெடுத்த ஸ்தலமாக சொல்லப்படுகிறது.
ஒரு மடாலயம் அமைப்பதற்கு ஏற்ற ஒரு ஸ்தலத்தை இந்த மேராக் லாமா லோட்ரே கியாம்ட்சோ தேடிக்கொண்டிருந்தபோது அதற்கேற்ற இடத்தை அவரால் முடிவு செய்ய இயலவில்லை.
எனவே அவர் தியானத்தில் அமர்ந்து இறைவழிகாட்டலுக்காக காத்திருக்க ஆரம்பித்தார். பின்னர் தியானம் முடிந்து அவர் கண்விழித்தபோது தனது குதிரை காணாமற்போயிருப்பதை தெரிந்துகொண்டார்.
குதிரையை தேடித்திரிந்த அவர் இறுதியில் அது ஒரு மலையின் உச்சியில் நிற்பதை கண்டார் மடாலயம் அமைப்பதற்கேற்ற இடம் குறித்த இறைவழிகாட்டல் தனது குதிரை மூலமாக கிடைத்தது போன்று அவர் உணர்ந்தார்.
எனவே ‘குதிரை தேர்ந்தெடுத்த இடம்’ எனப்பொருள்படும் ‘தவாங்’ என்ற பெயரில் அந்த ஸ்தலம் அழைக்கப்படலாயிற்று.  
தூய இயற்கைச்சூழலும், பிரமிப்பூட்டும் மலை எழிற்காட்சிகளும் நிறைந்த சொர்க்கபூமி போன்றே இந்த தவாங் நகரம் காட்சியளிக்கிறது.
சூரிய உதயத்தின் கதிர்கள் இப்பகுதியிலுள்ள சிகரங்களில் பட்டுத்தெறிப்பதும் சூரிய அஸ்தமனத்தின் வெளிச்சம் தொடுவானமெங்கும் கவிழ்ந்திருப்பதும் வேறெங்கும் காணக்கிடைக்காத தரிசனங்களாகும்.

தவாங் மலைவாசஸ்தலம் மற்றும் ஒட்டியுள்ள சுற்றுலா அம்சங்கள்

தவாங் மலைநகரத்தில் சுற்றுலாப்பயணிகள் விரும்பி விஜயம் செய்யும் அம்சங்களாக மடாலயங்கள், சிகரங்கள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை அமைந்திருக்கின்றன.
தவாங் மடாலயம், சேலா பாஸ் ஆகியவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இங்குள்ள நீர்வீழ்ச்சிப்பகுதிகள் பாலிவுட் படப்பிடிப்புகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
நிசப்தம் தவழும் ஏரிப்பரப்பு, ஆறுகள் மற்றும் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள் நீல நிற ஆகாயத்தை பிரதிபலித்தபடி காட்சியளிப்பது பார்வையாளர்களை மெய்மறக்க செய்யும் அற்புத தோற்றங்களாகும்.
ஒரு விசேஷமான இடத்துக்கு விஜயம் செய்ய விரும்பும் தீவிர இயற்கை ரசிகர்கள் யோசிக்காமல் தங்களது அடுத்த பயணத்திற்கு இந்த தவாங் மலை வாசஸ்தலத்தை தேர்ந்தெடுக்கலாம். ஒரு சொர்க்கலோகம் போன்று இந்த தவாங் மலைநகரம் மலையுச்சியில் வீற்றிருக்கிறது.

திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள்

மற்ற அருணாச்சல பிரதேச பகுதிகளைப்போன்று இந்த தவாங் மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையிலும் திருவிழா கொண்டாட்டங்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. இங்குள்ள மொன்பா இன மக்களின் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் ஆகியவை பெரும்பாலும் மதம் மற்றும் விவசாயம் சார்ந்ததாகவே உள்ளன.
ஒவ்வொரு வருடமும் பலவகையான திருவிழாக்கள் மொன்பா இன மக்களால் கொண்டாடப்படுகின்றன. இவற்றில் புதுவருடப்பண்டிகையான லோசார் எனும் திருநாள் பிப்ரவரி மாதத்தின் இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ கொண்டாடப்படுகிறது.
தொர்கியா எனும் மற்றொரு திருவிழா ஒவ்வொரு வருடமும் உள்ளூர் பஞ்சாங்கத்தின் 11வது மாதத்தில் 28 வது நாள் கொண்டாடப்படுகிறது. இது பொதுவாக ஜனவரி மாதத்தில் இடம் பெறுகிறது.
இந்த திருவிழா மக்களுக்கு தீமை மற்றும் துரதிர்ஷடத்தை கொண்டு வரும் துஷ்ட தேவதைகளை விரட்டுவதற்கான சடங்கு திருவிழாவாக அனுஷ்டிக்கப்படுகிறது. சகா தவா எனும் மற்றொரு திருவிழாவும் இங்கு கொண்டாடப்படும் முக்கியமான திருவிழாவாகும்.
சோயெக்கோர் எனும் ஊர்வலச்சடங்கு நிகழ்ச்சி ஒன்றும் இங்குள்ள ஒட்டுமொத்த கிராம மக்களும் கலந்துகொள்ளும் சடங்குத்திருவிழாவாக நிகழ்த்தப்படுகிறது.
இது விவசாயப்பயிர்களை எந்த விதமான இயற்கைச்சீற்றங்களும் பாதிக்காமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. உள்ளூர் பஞ்சாங்கத்தின் பதினோராவது மாதத்தில் விவாசய விளைச்சல் அதிகம் இல்லாதபோது இந்த சடங்கு நிகழ்ச்சி அனுஷ்டிக்கப்படுகிறது.

கலை மற்றும் கைவினைப்பொருட்கள்

மொன்பா என்றழைக்கப்படும் இந்த தவாங் மலைநகர மக்கள் அற்புதமான கைவினைத்திறன் வாய்க்கப்பெற்றவர்களாக உள்ளனர். பலவகையான கைவினைப்பொருட்கள், அழகுபொருட்கள், அலங்காரபொருட்கள் போன்றவை இங்குள்ள உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுகின்றன.
இந்த கலைப்பொருட்கள் அரசு கைவினைப்பொருள் அங்காடியிலும் விற்பனை செய்யப்படுகின்றன. மரத்தால் ஆன அழகுப்பொருட்கள், தரைவிரிப்புகள், மூங்கிலில் செய்யப்பட்ட உபயோகப்பொருட்கள் ஆகியவை இங்கு கிடைக்கும் வித்தியாசமான கைவினைப்படைப்புகளாகும்.
தங்கா பாணி ஓவியப்படைப்புகள் மற்றும் கைவினைத்தயாரிப்பு காகித வகைகள் போன்றவற்றுக்கும் இந்த தவாங் மலைநகரம் தனக்கென ஒரு பாரம்பரிய நுட்பங்களை கொண்டுள்ளது.
தொர்கியா பண்டிகையின் போது நிகழ்த்தப்படும் ஒரு வகை பாரம்பரிய நடனநிகழ்ச்சியில் அணிந்துகொள்வதற்கான மரமுகமூடிகள் இங்கு தயாரிக்கப்படும் வித்தியாசமான கலைப்படைப்புகளில் ஒன்றாகும். இந்த நடனம் தவாங் மடாலயத்தின் கூடத்தில் நடத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரத்தால் செய்யப்படும் டோலோம் எனும் உணவு தட்டு இங்கு உருவாக்கப்படும் மற்றொரு அற்புதமான கைவினைப்பொருளாகும். இவை தவிர ஷெங்-கிளம் என்பது மரத்தால் ஆன கரண்டி, க்ரக் எனும் மரத்தால் செய்யப்படும் தேநீர் கோப்பை போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.

தவாங் மலைநகரத்திற்கு விஜயம் செய்ய உகந்த பருவம்

வருடத்தின் பெரும்பான்மையான மாதங்களில் இங்கு மிதமான பருவநிலையே நிலவுகிறது. பொதுவாக மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இங்கு சுற்றுலாவுக்கேற்ற இனிமையான சூழல் காணப்படும்.

தவாங் மலைநகரத்திற்கு எப்படி பயணம் மேற்கொள்வது

நாட்டின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் அஸ்ஸாம் மாநிலத்தின் குவாஹாட்டி மற்றும் தேஜ்பூர்வழியாக தவாங் மலைநகரத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம். குவஹாட்டி வரையில் உள்நாட்டு விமான சேவைகள் உள்ளன.
டெல்லியிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ் மற்றும் சஹாரா ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் விமான சேவைகள் குவஹாட்டிக்கு தினசரி இயக்கப்படுகின்றன. இது தவிர குவஹாட்டி நகரத்துக்கு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றும் இயக்கப்படுகிறது.

No comments: